கோவையில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசிய மகனை தமிழில் பேசுமாறு கலாய்த்த ஏ.ஆர்.ரகுமானின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களை கைவசம் வைத்துள்ளார். குறிப்பாக தமிழில் மட்டும் தனுஷின் ராயன், கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி என அரை டஜன் படங்கள் அவர் கைவசம் உள்ளன.

இத்தனை பிசியான ஷெட்யூலுக்கு மத்தியிலும் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். பெரும்பாலும் வெளிநாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வந்த ரகுமானிடம் தமிழ்நாட்டில் கச்சேரி நடத்துமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற ரகுமான், சென்னை மற்றும் கோவையில் மறக்குமா நெஞ்சம் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்... எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா... 1 பாட்டுக்கு ஒரு கோடி கேட்ட வெளிநாட்டு கம்பெனியை கதறவிட்ட மணிரத்னம்

இதில் சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி நடைபெற இருந்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் ரத்து செய்யப்பட்ட அந்நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 10-ந் தேதி மீண்டும் நடத்தப்படும் என அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஏ.ஆர்.ரகுமான். 

Scroll to load tweet…

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி கோவையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய மகனை கலாய்த்த சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி மேடையில் தன்னுடைய மகனிடம் பயமா இருக்கா, இல்ல உற்சாகமா இருக்கா, பொண்ணுங்கலாம் பார்த்துட்டு இருக்காங்க என ரகுமான் சொன்னதும், ஆங்கிலத்தில் பேசினார் அமீன், இதையடுத்து தமிழ்ல பேசுப்பா என ரகுமான் சொன்னதும் அங்கிருந்த ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... சந்திராயன் 3.. கமெண்ட் அடித்து நெட்டிசன்களிடம் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் - தற்போது கொடுத்த விளக்கம் என்ன?