தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை ரெண்டாவது மூன்றாவது தடவை வரை பார்த்தால் ரசிகர். அதற்கும் மேல் ஏழெட்டு தடவை பார்த்தால் வெறியர். ஆனால் ஒரு ஜீவன் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை இதுவரை 100 தடவைக்கும் மேல் பார்த்ததாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டு ரஜினி வெறியர்களையே திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அவர் வேறு யாருமல்ல. இரைச்சல் மன்னன் என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத்தான். படம் ரிலீஸாகி 14 நாட்கள் தானே ஆகிறது. அப்ப டெய்லி 4 ஷோன்னு பார்த்தாக்கூட கணக்கு இடிக்குதே என்று கேட்க இருப்பவர்களுக்காக படம் ரீரெகார்டிங்கிற்கு வந்த முதல் நாளிலிருந்து என்று கணக்கு காட்டுகிறார் அனிருத்.

‘பேட்ட’ படம் முதல் நாளிலிருந்தே ‘விஸ்வாசத்தை விட சற்று பின் தங்கியே இருப்பதை ஒட்டி, சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அசராமல் எதாவது ஒரு விளம்பர உத்தியைக் கையாண்டு வருகிறது. அவற்றுள் ஒன்றாக நேற்று ‘பேட்ட’ படத்தை இதுவரை எத்தனை தடவை பார்த்திருக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்ததை ஒட்டி, தான் 100 தடவைக்கும் மேல் பார்த்திருப்பதாக பதிலை அளித்து முதல் பரிசை வென்றிருக்கிறார் அனிருத்.

அடுத்த படத்துக்கு மட்டுமில்ல, இனி ஆயுசுக்கும் நீங்கதான் ரஜினி படத்துக்கு மியூசிக் டைரக்டர் அனிருத்.