மாணவர்களின் நண்பனாகவும் நல்லாசிரியராகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் சிறப்பாகச் சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது மாறுதலில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பகவானின் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது தவிர பள்ளியைப் பூட்டி போராட்டமும் நடத்தினார்கள். அந்த நேரம் பள்ளிக்கு வந்த பகவானை, மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர். 

இந்தச் செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து நாடு முழுவதும் ஆசிரியர் பகவானுக்கு நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி பகவானை செல்போனில் அழைத்து வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார். `மாணவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுங்கள். நான் சாட்டை படத்தின் ரீல் ஹீரோதான்; நீங்கள்தான் ரியல் ஹீரோ. உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். சமுத்திரக்கனியின் பாராட்டால் உள்ளம் நெகிழ்ந்து இருக்கிறார் பகவான்.