கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமெடி நடிகர் அல்வா வாசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அல்வா வாசு. இவர், வாழ்க்கைச் சக்கரம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த அமைதிப்படத்தில், அல்வா வாங்கி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அல்வா வாசு என பிரபலமானார்.

600-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர், நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

அல்வா வாசு, கடந்த 6 மாதங்களாக கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அவரின் மனைவியிடம், அவருக்கு அளித்து வந்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை என்றும், அதனால், அவரை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் அவரின் குடும்பத்தார்கள் கவலையுடன் உள்ளனர். அல்வா வாசுவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.