ரிலீஸுக்கு இன்னும் சரியாக மூன்று வாரங்களே உள்ள நிலையில் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படம் எந்த ஏரியாவிலும் விலை பேசி முடிக்கப்படாததால் தயாரிப்பாளர் போனி கபூர் மீது அஜீத் செம டென்சனில் இருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்படுவதுதான் என்று சொல்லப்படுகிறது. அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் வசூலை விலையாகச் சொல்வதால் பலரும் தயங்குவதாகத் தகவல்.

அதேநேரம், ஒரே நேரத்தில் ஏழெட்டு நிறுவனங்கள் இப்படத்தின் தமிழக திரையரங்குகள் உரிமையைப் பெற போட்டி போடுகின்றன என்றும் சொல்கிறார்கள்.ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்றுவிட்டது என்றொரு தகவல் பரவியது. ஆனாலும் அந்தத் தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இப்பட உரிமையைப் பெறும் முயற்சியில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, இல்லை என்று மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்  மதுரை அன்புச்செழியன் இப்படத்தின் உரிமையைப் பெற்றிருப்பதாகச் செய்தி பரவியது.இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அப்படி ஒரு தகவலை நானும் கேள்விப்பட்டேன். அது உண்மையில்லை எங்கள் நிறுவனம் அந்தப்படத்தை வெளியிடவில்லை என்று சொன்னார்.அஜீத்தின் முந்தைய படமான விஸ்வாசம் பெரும் வெற்றி பெற்றிருந்தும் அதற்கடுத்து வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் வியாபாரம் முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அதற்குக் காரணம் இது ரீமேக் படம் என்பதுதான் என்றும் சொல்கிறார்கள். ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் போனி கபூர் மிக அலட்சியமாக இருப்பதால் அஜீத் அவர் மீது செம டென்சனில் இருக்கிறாராம்.