நடிகர் அஜித் மற்றும் சூர்யா நடித்த படங்களின் சாட்டிலைட் உரிமம் விற்பனை ஆகாமல் உள்ளதாம். இதில் அஜித் படத்தை வாங்கிய சன் டிவி பின்னர் டீலை கேன்சல் செய்துவிட்டதாம்.

Ajith and Suriya Movie Satellite Rights Not Sold : சினிமாவில் முன்பெல்லாம் ஒரு படத்திற்கு வருவாய் என்பது அதன் திரையரங்க வசூலை மட்டுமே நம்பி இருக்கும். ஆனால் தற்போது பல வழிகளில் வருவாய் ஈட்டி வருகிறார்கள். குறிப்பாக படம் ரிலீஸ் ஆகும் முன்பே ப்ரீ ரிலீஸ் பிசினஸ் என சொல்லி கோடி கோடியாய் லாபம் ஈட்டி வருகின்றனர். அதிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அதன் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் போட்டி போட்டு நடைபெறும். இந்த ப்ரீ ரிலீஸ் பிசினஸால் தான் படத்தை எடுத்தும் தயாரிப்பாளர்கள் படம் தோல்வி அடைந்தாலும் பெரியளவில் நஷ்டம் இன்றி தப்பித்து விடுகிறார்கள்.

ஆடியோ உரிமம், ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம் ஆகியவை ப்ரீ ரிலீஸ் பிசினஸில் அடங்கும். பெரிய நடிகர்களின் படங்களைப் பொருத்தவரை இந்த மூன்றும் 100 கோடிக்கு மேல் விற்பனை ஆகிவிடும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அதன் சாட்டிலைட் உரிமம் விற்பனை ஆகிவிடும். ஆனால் தற்போது உஷாரான சாட்டிலைட் தொலைக்காட்சிகள் படம் ரிலீஸ் ஆன பின்னர் அதன் ரெஸ்பான்ஸை பொருத்து அதை வாங்கலாமா... வேண்டாமா என முடிவெடுக்கிறார்கள்.

குட் பேட் அக்லி மற்றும் ரெட்ரோ பட சாட்டிலைட் உரிமம் விற்பனை ஆகாதது ஏன்?

அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர சின்ன நடிகர்களின் படங்களின் சாட்டிலைட் உரிமத்தை வாங்க தொலைக்காட்சிகள் தயக்கம் காட்டி வந்தன. தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இதே நிலை வந்துள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ரூ.240 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய குட் பேட் அக்லி திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனை ஆகவில்லையாம். இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை முதலில் சன் டிவி கைப்பற்றி இருந்ததாம். ஆனால் தற்போது அந்த டீலை சன் டிவி கேன்சல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வரும் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் சாட்டிலைட் உரிமமும் இன்னும் விற்பனை செய்யப்படாமல் தான் உள்ளதாம். முன்னணி நடிகர்களின் படங்களையே சாட்டிலைட் சேனல்கள் வாங்க தயங்குவதற்கு ஓடிடி தளங்களும் ஒரு காரணம் தான் என கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடுகிறது. அதனால் ஓடிடியிலேயே பெரும்பாலானோர் அப்படங்களை பார்த்துவிடுகிறார்கள். அதை டிவியில் ஒளிபரப்பும் போது டிஆர்பி ரேட்டிங் அடிவாங்குவதால் பெரிய படங்களை வாங்கவும் தயக்கம் காட்டுகிறார்களாம்.

ஆனால் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமம் அதன் ரிலீசுக்கு முன்பே விற்பனையாகிவிட்டன. அதன்படி ஜனநாயகன் மற்றும் கூலி ஆகிய இரண்டு திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமத்தையும் சன் டிவி தான் கைப்பற்றி இருக்கிறது.