"அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோவம் வரும்".. லால் சலாம் ஆடியோ லாஞ்சு - உணர்ச்சிவசமாக பேசிய ஐஸ்வர்யா!
Aishwarya Rajinikanth : இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் தனுஷ் அவர்களின் 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார்.
அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளியான "வை ராஜா வை" மற்றும் 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு டாக்குமெண்டரி திரைப்படமான "சினிமா வீரன்" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெளியிட்டு இருக்கிறார். மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் ரீமாசென்க்கு டப்பிங் பேசியது ஐஸ்வர் ரஜினிகாந்த் அவர்கள் தான்.
இந்நிலையில் அவர் தனுஷ் அவர்களை மணந்து அவருக்கு யாத்திரா மற்றும் லிங்கா ஆகிய இரு குழந்தைகள் பிறந்த பிறகு கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படமான லால் சலாம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது இரு மகன்களோடு அவர் பங்கேற்றார்.
மேலும் மேடையில் பேசிய அவர் தனது பட குழுவினருக்கு நன்றி கூறினார், மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு எக்ஸ்டெண்டெட் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்த தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி கிடையாது அப்பாவை சங்கி என்று சொல்லும் பொழுது எனக்கு கோபம் வரும். இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது, சங்கியா இருந்தா அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று உணர்ச்சி வசமாக பேசியுள்ளார்.