கேப்டன் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி - நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்ன சிலம்பரசன்!
Captain Vijayakanth : பிரபல நடிகர் சிம்பு, மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மூத்த நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட நிமோனியா தொற்று காரணமாக காலமானார்.
விஜயகாந்தின் மறைவு அவருடைய ரசிகர்கள் மத்தியிலும், தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பேரிழப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. அவர் இறந்த அடுத்த நாளான டிசம்பர் 29ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய பூத உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல அவருடைய இறப்பிற்கு வர முடியாத பல நடிகர் நடிகைகளும் தங்களது சமூக வலைதள பக்கங்களின் மூலம் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது 48வது திரைப்பட பணிகளில் இருக்கின்ற நடிகர் சிம்பு அவர்கள் இன்று கேப்டன் விஜயகாந்த் அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
வருகின்ற பிப்ரவரி மாதம் சிலம்பரசனின் 48வது திரைப்பட பணிகள் துவங்க உள்ளது, அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.