துவக்கத்தில் பாதி செட்டில்மெண்டுக்கு ஒத்துக்கொண்ட ஃபைனான்சியர்கள் தற்போது முழு செட்டில்மெண்டையும் கொடுத்தால் பட ரிலீசுக்கு அனுமதி வழங்க முடியும் என்று பிடிவாதம் பிடிப்பதால்,கவுதம் தனுஷ் கூட்டணியின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’நாளை ரிலீஸாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

இயக்குநர் கவுதம் மேனன் தனுஷை வைத்து எடுத்துள்ள ’எனை நோக்கி பாயும் தோட்டா’திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. பல்வேறு பிரச்னைகளால் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்து வருவதாகவும் கூறப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளிவராமலேயே இருந்தது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருந்ததால், அந்த படத்துக்கு எதிர்பார்ப்பும் எகிறியதுஇந்நிலையில் படத்தின் புதிய ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு செப்டம்பர் 6ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் எனை நோக்கி பாயும் தோட்டாவை எதிர்நோக்கி பதிவுகளையும் மீம்ஸ்களையும் பதிவிட்டனர்.

இந்நிலையில் அறிவிப்பு வெளியானது போல் படம் நாளை வெளியாகாது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு சில கடன்கள் நிலுவையில் இருப்பதால் அதனை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது. துவக்கத்தில் இப்படத்தில் பாதி, நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பாதி என்று செட்டில்மெண்டுக்கு ஒத்துக்கொண்ட ஃபைனான்சியர்கள் தற்போது முழு செட்டிமெண்டையும் தந்தால்தான் பட ரிலீஸுக்கு அனுமதிக்க முடியும் என்று பிடிவாதம் பிடித்து வருவதாகவும் இது தொடர்பான பஞ்சாயத்து நான்ஸ்டாப்பாக நடந்து வருவதாகவும்  அந்தப் பிரச்னைகள் இன்றே தீர்க்கப்பட்டால் நாளை வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அப்படி இல்லையென்றால் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.