ஜெமினி கணேசன் நடித்த தேனிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை வசந்தி.
1960-ம் ஆண்டு மகாகவி காளிதாசு என்ற தெலுங்கு திரைபடத்தின் மூலம் அறிமுகமானவர் வசந்தி. நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் நடனம் நாட்டியத்தை கற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கு படங்களில் அவர் நடித்து வந்த நிலையில் அவர் ஜெமினி கணேசன் நடித்த தேனிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குவியத்தொடங்கின. எம்.ஜி.ஆர். நடித்த மாடப்புறா என்ற படத்தில் 2-வது கதாநாயகியாக வசந்தா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். தொடர்ந்து அவன் தான் இவன், பலே பாண்டியா, பொம்மை, என்னதான் முடிவு, சரசா பி.ஏ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தமில், மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த அவர் ஏராளமான தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தார். மேலும் இரண்டு தெலுங்கு படங்களையும் அவர் தயாரித்துள்ளார். பிசியான நடிகையாக வலம் வந்த போது அவர் திமுக எம்.எல்.ஏ ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1960 முதல் 1978 வரை 18 ஆண்டுகள் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்த அவர் திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். வசந்தி – ஸ்ரீனிவாசன் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே 29-ம் தேதி சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். 2-வது கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாக கலக்கிக் கொண்டிருந்த வசந்தியின் நடிப்பு அந்த கால ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
