கார் விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 24ம் தேதி யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழி மற்றும் நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகேயுள்ள ரிசார்ட்டில் பார்ட்டி கொண்டாடிவிட்டு காரில் திரும்பினார். நள்ளிரவு ஒரு மணி அளவில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற இடத்திற்கு வந்த போது அவருடைய கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த அன்று, யாஷிகா ஆனந்த் காரை ஓட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இடது பக்கத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த தோழி வள்ளி செட்டி பவணியும், பின் இருக்கையில் சென்னையைச் சேர்ந்த சையது மற்றும் அமீர் அமர்ந்துள்ளனர். 4 பேருமே மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 11 மணி அளவில் சென்னையை நோக்கி பயணித்துள்ளனர்.

சூளேறிக்காடு பேருந்து நிலையத்தை கடந்ததுமே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கே படுகாயம் அடைந்துள்ளனர். இதில் யாஷிகா ஆனந்த், சையது, அமீர் ஆகியோர் அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் மேற்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாஷிகாவின் தோழியான வள்ளிசெட்டி பவணி முதற்கட்டமாக ஆம்புலன்ஸ் மூலமாக மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி முதலுதவி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாஷிகா ஆனந்த் உடைய கார் விபத்து ஏற்பட்ட இடத்தில் வேகத்தடை மற்றும் சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும், யாஷிகா ஆனந்த் குடிபோதையில் இல்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
