கர்ப்பிணியாக சமந்தா... வயிற்றில் குழந்தையுடன் ஆக்ஷன் ஹீரோயினாக அதகளம் செய்யும் நாயகி - வைரலாகும் யசோதா டீசர்
Samantha : ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி ஷங்கர் ஆகியோர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள யசோதா படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா, இவர் நடிப்பில் தற்போது குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார் சமந்தா, இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. குறிப்பாக இவர் நடிப்பில் உருவாகி உள்ள யசோதா திரைப்படம் கடந்த மாதமே ரிலீசாவதாக இருந்தது. பின்னர் படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.
இதையும் படியுங்கள்... 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்தது இந்த சீரியல் நடிகையா?
பான் இந்தியா படமாக யசோதா தயாராகி உள்ளது. இதில் நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி ஷங்கர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து உள்ளார்.
இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்மூலம் நடிகை சமந்தா இப்படத்தின் கர்ப்பிணிப்பெண்ணாக நடித்துள்ளது தெரிகிறது. கர்ப்பமாக இருக்கும் போதே தன் வயிற்றில் வளரும் பிள்ளையை காப்பாற்ற ஆக்ஷன் ஹீரோயினாக அவர் அவதாரம் எடுக்கும்படியான காட்சிகள் அந்த டீசரில் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கேரளத்து சேலையில் தேவதையாக மிளிரும் அமலாபால்... வைரலாகும் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்