கொரோனா வைரஸ் இந்திய மக்களை அச்சுறுத்தி வருவதால், இதில் இருந்து மக்களை காப்பாற்ற, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. 

தமிழகத்தில் 144 தடை போடப்பட்டுள்ளதால், பல தொழிலாளர்கள் வேலை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சினிமா துறையை நம்பி இருக்கும், பெப்சி ஊழியர்கள், பலர் அன்றாட உணவிற்கு கூட அல்லாடும்  சூழல் உருவாகியுள்ளது.

இவர்களின் கஷ்டத்திற்கு உதவ வேண்டும் என பெப்சி அமைப்பின் தலைவர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, கேட்டுக்கொண்டதால் பல நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பெப்சி ஊழியர்களுக்கு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய்சேதுபதி, சூர்யா, சிவகார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தாணு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஆகியோர் பணமாகவும் அரிசி மூட்டைகளை கொடுத்து உதவியுள்ளனர்.

இந்நிலையில், முதல்முறையாக  இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா 100 மூட்டை அரிசி கொடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார்.

இதுகுறித்து ரோஜா தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா என்ற வைரசின் தாக்கத்தால், பலர் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெப்சி தொழிலாளர்களுக்கு நூறு மூட்டை அரிசியை கொடுக்க போகிறேன். ஆனால் இது பெரிய விஷயமல்ல. நீங்கள் செய்யவேண்டியது குடும்பத்தோடு வீட்டுக்குள்ளேயே விலகி இருங்கள். 

காரணம் 40 வருடமாக நீங்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டு இருப்பீர்கள். கெட்டதிலும் ஒரு நல்லது கடவுள் நமக்கு கொடுத்த இந்த விடுமுறையை குடும்பத்தோடு செலவழியுங்கள். நீங்கள் வீட்டில் இருப்பதே பெரிய உதவி. பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் என்று ரோஜா தன் வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார்.