காலில் காயம் ஏற்பட்டு ஓய்வெடுத்து வரும் ராதிகாவை நடிகர் சிவகுமார் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ராதிகா சரத்குமார் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது. ராதிகாவின் காலில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகுமார் ராதிகாவை சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பான வீடியோவை ராதிகா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா தனது அண்ணன் தன்னை பார்க்க வந்ததாக தெரிவித்துள்ளார். . பழைய நினைவுகளையும், பழைய நாட்களையும், புகைப்படங்களையும், ஆல்பங்களையும் பார்த்து ரசித்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பதிவில் “ காலில் அடிபட்டு குணமாகி வரும் என்னை பார்க்க இன்று சிவகுமார் அண்ணன் வந்தார். அவருடனான வாழ்க்கை பந்தம் மறக்க முடியாதது. பழைய நாட்கள், புகைப்படங்கள், வரைபடங்களை பார்த்து நினைவுகூர்ந்தோம்” என்று தெரிவித்தார்.
ராதிகாவும் சிவகுமாரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக பாசப்பறவைகள் படத்தில் அண்னன் தங்கையாக நடித்திருப்பார்கள். மேலும் சித்தி சீரியலிலும் ராதிகா சரத்குமாரும் இனைந்து நடித்தனர். திரை வாழ்க்கையை தாண்டி இருவரும் சகோதர சகோதரி போலவே பழகி வந்துள்ளனர்.
திரை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என இரண்டிலுமே ராதிகா பிசியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பல மொழிகளில் அம்மா கேரக்டரில் ராதிகா நடித்து வருகிறார். மறுபுறம் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனிடையே மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ராதிகா சரத்குமார், சரத்குமார் குறித்து அவதூறாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்ட ராதிகா, இதுபோன்றவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதிகா தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
