நடிகை நிவேதா தாமஸின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Nivetha Thomas
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்திருப்பவர் நிவேதா தாமஸ். கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட இவர், பிறந்து வளர்ந்தது அனைத்துமே சென்னையில் தான். சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் மற்றும் மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டமும் பெற்றிருக்கிறார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது எட்டு வயதிலேயே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மை டியர் பூதம்’ என்கிற தொடரில் நடித்தார். இந்த தொடரின் மூலமாக நிவேதா தாமஸ் முதல் முறையாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.
வெள்ளித்திரைக்கு சென்ற நிவேதா தாமஸ்
தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘சிவமயம்’, ‘அரசி’ போன்ற தொடர்களில் நடித்தார். 2008 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ‘வெருதே ஒரு பார்யா’ படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றார். அதே ஆண்டில் தமிழில் விஜயின் ‘குருவி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். 2011 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ‘போராளி’ திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அனைவரின் கவனத்தையும் பெற்றார். பின்னர் 2013 ஆம் ஆண்டு ஜெய்க்கு ஜோடியாக ‘நவீன சரஸ்வதி’ சபதம் படத்தில் நடித்திருந்தார்.
ரஜினி, கமலுக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு
2014 ஆம் ஆண்டு வெளியான ‘ஜில்லா’ திரைப்படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு நிவேதா தாமஸின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ஆண்டு ஆகும். கமலஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மூத்த மகளாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற அவர் 2016ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதையும் பெற்றார். 2020 ஆம் ஆண்டு ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்திற்கு மகளாக நிவேதா நடித்திருந்தார்.
நிவேதா தாமஸின் உடல் எடை அதிகரிக்க காரணம்
குறுகிய காலத்திலேயே தனது இயல்பான மற்றும் நுட்பமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நிவேதா தாமஸ், சமீபத்தில் தெலங்கானா அரசின் விருதை வென்றுள்ளார். தெலங்கானாவில் முதல்முறையாக திரைத்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது ‘புஷ்பா 2’ திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுனனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘35 இதி சின்ன கத காது’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகையாக நிவேதா தாமஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக நிவேதா தாமஸின் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
உருவக்கேலிக்கு விருது மூலம் பதிலடி
நிவேதா தாமஸ் தனது படத்தை விளம்பரப்படுத்துவதற்காக வந்த நிகழ்ச்சிகளில் அவரது உடல் தோற்றத்தை வைத்து பலரும் உருவக்கேலி செய்தனர். சிலர் அவருக்கு உடல் நலப் பிரச்சினை ஏற்பட்டதாக அவதூறாக பதிவிடத் தொடங்கினர். ஆனால் அத்தகைய விமர்சனங்களை புறந்தள்ளி ‘35 இதி சின்ன கத காது’ படத்தில் தனது சிறப்பான நடிப்பை நிவேதா தாமஸ் வெளிப்படுத்தினார். அவரது உருவக்கேலி குறித்து இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். தற்போது தெலங்கானா அரசின் விருதை வென்றதன் மூலம் தோற்றம் குறித்து அவதூறாக பதிவிட்டவர்களின் வாயை அடைத்துள்ளார் நிவேதா தாமஸ்.
