Actress Meenakshi thapar murder case 2 get life sentence

பிரபல இந்திப்பட நடிகையை பணம் கேட்டு மிரட்டி கிடைக்காததால் துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலர்களுக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் மீனாட்சி தாபர். 27 வயதான இவர் இந்தி திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர். அது மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் பணியாற்றி வந்தார்.

மீனாட்சி தாபர் மும்பையில் இந்தி படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித் குமார் மற்றும் அவரது காதலி பிரீத்தி சுரின் ஆகியோர் பழக்கமானார்கள்.

அவர்கள் இருவரும் தாங்கள் திரைப்படம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றும் மீனாட்சி தாபரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் மற்றொரு சினிமா படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் அவர்கள் கூறினர்.

அவர்களை நம்பிய மீனாட்சி தாபர் அந்த காதலர்களுடன் சென்றார். ஆனால் மீனாட்சியை அவர்கள் இருவரும் அலகாபாத்துக்கு கடத்திச்சென்றனர். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். ஆனால் அவரது பெற்றோர் வெறும் ரூ.60 ஆயிரத்தை மட்டும் கடத்தல்காரர்கள் கூறிய வங்கிக்கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அமித்குமாரும், பிரீத்தியும், மீனாட்சி தாபரின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்த மும்பை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என கடந்த புதன்கிழமை அறிவித்து.

இந்த நிலையில் தண்டனை மீதான வாதம் நடந்து வந்தது. இதையடுத்து நேற்று கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஷெட்டே தண்டனை விவரத்தை அறிவித்தார். அப்போது மீனாட்சி தாபர் கொலை வழக்கு குற்றவாளிகள் அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.