மரண தண்டனை கொடுக்கனும்... மணிப்பூர் சம்பவம் குறித்து கொந்தளித்த குஷ்பூ மற்றும் அக்ஷய் குமார்
மணிப்பூரில் இரண்டு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை குஷ்பூ காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மணிப்பூரில் வன்முறை வெடித்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் அங்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், அங்கு நடந்த ஒரு கொடூர சம்பவம் தற்போது நாட்டையே உலுக்கி உள்ளது. அதன்படி மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து செல்லும் ஒரு கும்பல், பின்னர் அந்த பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. இத்தகைய கொடூர சம்பவத்தை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை குஷ்பூ மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... மணிப்பூரில் 2 பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்! தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!
நடிகை குஷ்பூ போட்டுள்ள டுவிட்டில், மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை இழைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். சில ஆண்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகிறது” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதேபோல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் போட்டுள்ள பதிவில், “மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்..” நாட்டையே உலுக்கிய வைரல் வீடியோ குறித்து மணிப்பூர் காவல்துறை விளக்கம்..