“குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்..” நாட்டையே உலுக்கிய வைரல் வீடியோ குறித்து மணிப்பூர் காவல்துறை விளக்கம்..
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று நேற்று வெளியானது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த சூழலில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று நேற்று வெளியானது. ஒரு கும்பல் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அந்த 2 பெண்களும் பழங்குடியின பெண்கள் என்றும், அவர்கள் சாலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் (SP), கே மேகச்சந்திர சிங் இந்த வீடியோ குறித்த ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். அந்த செய்திக்குறிப்பில், "2023 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களால் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ தொடர்பாக, நாங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் (தௌபல் மாவட்டம்) கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கியுள்ளது மற்றும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இதற்கு பதலளித்திருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்மிருதி இரானி, "மணிப்பூரில் இருந்து வெளிவரும் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரமான வீடியோ கண்டனத்துக்குரியது, மனிதாபிமானமற்றது. இதுகுறித்து மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங்கிடம் பேசினேன். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த தேவையான முயற்சிகளை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவரின் பதிவில் “ பிரதமரின் அமைதி மற்றும் செயலற்ற தன்மை மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி.” என்று பதிவிட்டுள்ளார்.
31 மசோதாக்களுடன் ரெடியான மத்திய அரசு! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!