31 மசோதாக்களுடன் ரெடியான மத்திய அரசு! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு 21 புதிய மசோதாக்கள் உள்பட 31 சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
இன்று (ஜூலை 20ஆம் தேதி) தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், ஏற்கனவே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் உட்பட மொத்தம் 31 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இவற்றில் குறிப்பாக, டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி அரசால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள டெல்லி அவசரச் சட்டத்திற்கான மசோதா அதிக கவனத்தைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் முதல்வருக்குப் பதிலாக ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் இந்த மசோதா அங்கு எளிதில் நிறைவேறிவிடும். ஆனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால், ஆம் ஆத்மி அனைத்து எதிர்கட்சிகள் ஆதரவுடன் இந்த மசோதாவை தோற்கடிக்கும் நம்பிக்கையில் உள்ளது.
மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. அதில் 34 கட்சிகளைச் சேர்ந்த 44 தலைவர்கள் பங்கேற்றதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 23 நாட்கள் நடக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் முறையாக நடைபெறும் கூட்டத்தொடர் இது என்பதாலும் இது இந்தக் கூட்டத்தொடர் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள 31 மசோதாக்களின் பட்டியலும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 21 புதிய மசோதாக்கள் உள்பட 31 மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன.
அதையெல்லாம் படிக்கக் கூடாது! பிரபலமான ஓரினச்சேர்க்கை நாவலை விற்ற கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்!
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023, உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா 2021, ரத்து மற்றும் திருத்த மசோதா 2022, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா 2022, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா 2022 , மத்தியஸ்த மசோதா 2021, பட்டியலின பழங்குடியினர் (ஐந்தாவது திருத்தம்) மசோதா 2022, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா 2023 ஆகியவை உள்ளிட்ட 31 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். நீர் தேர்வு ரத்து, ஆன்லைன் சூதாட்ட மசோதா, மேகதாது அணை மற்றும் காவேரி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களும் எழுப்பப்பட வாய்ப்பு உள்ளது.
இரண்டு கூட்டணியும் தலித் விரோதிகள்... 2024ல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி! மாயாவதி அதிரடி முடிவு