மணிப்பூரில் 2 பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்! தட்டிக்கேட்ட இளைஞர் கொலை!
தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்தச் சம்பவம் கடந்த மே மாத தொடக்கத்தில் மணிப்பூரில் வன்முறை வெடித்த ஆரம்ப நாட்களிலேயே நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் வன்முறை குறித்து பிரதமர் மோடி மௌனம் காத்துவரும் சூழலில், அந்த மாநிலத்தில் நடந்த கொடூர நிகழ்வு ஒன்றில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கும்பல் இரண்டு பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் துயர சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்வினை செய்யும் பயனர்கள் கடும் கண்டனங்களையும் உடனடி நடவடிக்கைக்கான கோரிக்கையையும் முன் வைத்து வருகின்றனர்
ஆடையின்றி பொதுவெளியில் பல ஆண்களால் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் என்றும் அந்தப் பெண்கள் இருவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், ஒருவர் டெல்லியைச் சேர்ந்த பெண் என்றும் அவருக்கும் வயது 40 என்றும் தெரிய வந்துள்ளது. மனம் பதைக்க வைக்கும் இந்த கொடூர சம்பவம் மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் மே 4 அன்று நடந்தது என பழங்குடித் தலைவர்கள் மன்றம் (ITLF) சொல்கிறது.
மனிதத்தன்மையற்ற செயலால் கொடூரமாகக் கொல்லபட்ட இரண்டு பெண்களும் குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் ஒருவரை குற்றவாளிகளின் கும்பல் கொலை செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்தப் பெண்கள் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. காங்போக்பியில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் வேறொரு மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கை முதன்மையாக விசாரிக்க காவல்துறைக்கு முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள் சொல்கின்றன. இந்தக் கொடூரமான நிகழ்வு குறித்து முதல்வர் பிரேன் சிங் மற்றும் மாநில தலைமைச் செயலாளரிடம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாக மணிப்பூர் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குற்றம் செய்தவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் உறுதி அளிக்கப்பட்டதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெட்கக்கேடான இந்த செயல் பற்றி பழங்குடித் தலைவர்கள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மே 4 அன்று காங்போக்பி மாவட்டத்தில் நடந்த இந்த கேவலமான நிகழ்வு, ஆதரவற்ற பெண்களை ஆண்கள் தொடர்ந்து துன்புறுத்துவதைக் காட்டுகிறது. அந்தப் பெண்கள் அவர்களிடம் தங்களை விட்டுவிடுமாறு அழுது மன்றாடுகிறார்கள்" என்று கூறுகிறது.
உம்மன் சாண்டியின் கடைசி ஆசை... மனைவி சொன்னதை அப்படியே நிறைவேற்றிய கேரள அரசு!
இந்த கொடுமையைச் செய்த குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதால், அந்த அப்பாவி பெண்கள் அனுபவிக்கும் துயரம் மேலும் அதிகரிக்கிறது எனவும் பழங்குடியின தலைவர்கள் மன்றம் கவலை தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம், மற்றும் தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடமும் இந்தத் துயரச் சம்பவம் குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின தலை தலைவர்கள் மன்றம் முறையிட்டுள்ளது.
நாட்டையே தலைகுனிய வைக்கும் இந்த இழிவான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய காவல்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மணிப்பூர் காவல்துறை ட்விட்டரில் உறுதி அளித்துள்ளது.
31 மசோதாக்களுடன் ரெடியான மத்திய அரசு! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
மே 3 ம் தேதி மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் வெடித்ததில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். மெய்தி சமூகத்தினர் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கின்றனர். குக்கிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
மெய்தி சமூக மக்கள் தங்களுக்கு பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இது தொடர்பான வழக்கில், மெய்தி சமூகத்தினரின் கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் எதிரொலியாக இரு சமூகத்தினரும் நடத்திய பேரணியில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் தொடங்கின.