உம்மன் சாண்டியின் கடைசி ஆசை... மனைவி சொன்னதை அப்படியே நிறைவேற்றிய கேரள அரசு!
இறுதிச் சடங்கை எந்தவித அரசு மரியாதையும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதுதான் உம்மன் சாண்டியின் கடைசி ஆசை என்று அவரது குடும்பத்தினர் மாநில அரசுக்கு தெரிவித்தனர்.
புற்றுநோயுடன் நீண்டகாலமாகப் போராடி வந்த கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் அவரது கடைசி விருப்பத்தின்படி அரசு மரியாதையின்றி இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இறுதிச் சடங்கை எந்தவித அரசு மரியாதையும் இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதுதான் உம்மன் சாண்டியின் கடைசி ஆசை என்று அவரது குடும்பத்தினர் மாநில அரசுக்கு புதன்கிழமை தெரிவித்தனர். அதை கேரள அரசும் ஏற்றுக்கொண்டது. அதன்படி, வியாழன் மதியம் கோட்டயத்தில் உள்ள புதுப்பள்ளியில் உள்ள அவரது இல்லமான புனித ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
"கடந்த ஆண்டு நவம்பரில் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு செல்வதற்கு முன்பு, தனது இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை அளிக்கக் கூடாது என்று எனது தாயிடம் குறிப்பிட்டார். அதுவே அவரது கடைசி ஆசை. அவரது விருப்பத்தை குடும்பத்தினர் அனைவரும் நிறைவேற்ற வேண்டுகிறோம். இந்த கடைசி ஆசை குறித்து எனது தாயார் அரசாங்கத்திடம் தெரிவித்தார். இறுதிச் சடங்கு அரசு மரியாதையின்றி நடைபெறும்" என மகன் சாண்டி ஓமன் கூறியுள்ளார்.
புதன்கிழமை, சாண்டியின் உடல் தலைநகரில் இருந்து அவரது சொந்த ஊரான கோட்டயத்திற்கு சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரம் முதல் கோட்டயம் வரை சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மறைந்த தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். காலை 7 மணிக்கு உம்மன் சாண்டியின் உடலைத் தாங்கிய வாகனம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.
புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் உம்மன் சாண்டியின் பங்களிப்பை நினைவுகூர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. அவரது மறைவை ஒட்டி செவ்வாய்க்கிழமை கேரள அரசு பொது விடுமுறையை அறிவித்ததுடன் மாநிலத்தில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.