நடிகை ஜெயபிரதாவுக்கு சிறை தண்டனை உறுதி! 15 நாட்களுக்குள் 20 லட்சம் டெபாசிட் செய்யவேண்டும் நீதிமன்றம் அதிரடி!
நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என கொடுக்கப்பட்ட புகாரில் அவருக்கு சிறை தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயப்பிரதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நினைத்தாலே இனிக்கும், கமலஹாசனுடன் சலங்கை ஒலி, தசாவதார உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் களம் கண்ட ஜெயப்பிரதா , ஆரம்பத்தில் தெலுங்கு தேசத்தில் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அதே போல் நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியான ஜெயப்பிரதா நடிப்பில் இருந்து முழுமையாக விலகி, அரசியலில் ஆர்வம் காட்டினார். மேலும் ஜெயப்பிரதா சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை, சில தொழில்களில் இன்வெர்ஸ் செய்துள்ளதோடு, இவரின் பெயரில் திரையரங்கம் கட்டி அதன் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக, சென்னை ராயப்பேட்டையில் கூட ஜெயப்பிரதா என்னும் திரையரங்கம் இயக்கி வந்தது. இந்த திரையரங்கம் சில பிரச்சனைகள் காரணமாக மூடப்பட்ட நிலையில், அண்ணா சாலையில் ஒரு திரையரங்கத்தை சில தொழிலதிபர்களுடன் சேர்ந்து நடத்தி வந்தார். இந்த திரையரங்கம் தான் தற்போது ஜெயப்ரதாவுக்கு சிறை தண்டனையை பெற்று கொடுத்துள்ளது. இந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் இவர் வசூலித்த இ.எஸ்.ஐ., தொகையை, முறையாக தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை. இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவர் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயப்பிரதா தரப்பில், இருந்து தொழிலாளர்களிடம் பெற்ற தொகையை செலுத்திவிடுவதாக தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து மீண்டும் ஜெயப்பிரதா தரப்பில் இருந்து எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீடு தொடர்பான மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், நடிகை ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு விதித்த சிறை தண்டனையை உறுதி செய்தது மட்டும் இன்றி, 15 நாட்களுக்குள் 20 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய கோரி உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D