தமிழ் சினிமாவில், கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கும் ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவதான் நடிகர் சரவணன். 80 களில் பல படங்களில் முன்னணி நடிகராக நடித்து பிரபலமானவர். திரைப்படம் தயாரித்தால் ஏற்பட்ட நஷ்டம், அதனால் வந்த பிரச்சனைகள் காரணமாக இவர் சில ஆண்டுகள் திரையுலகை விட்டு விலகும் நிலை உருவானது.

இந்நிலையில், சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' படத்தில் இவர் நடித்த செவ்வாழை கதாப்பாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் கதாப்பாத்திரமாக உள்ளது.

மேலும், கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையிலும், கல்லூரி காலங்களில் நடந்த பஸ் பயணத்தை பற்றி இவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியதால், இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீர் என வெளியேற்றப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், முதல் முறையாக இவர் தன்னுடைய இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று, சாண்டியின் மனைவி மற்றும் குழந்தை தஷாவை சந்தித்துள்ளார். சாண்டியின் குழந்தையுடன் இவர் அவருடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.