பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சீராகி வந்த அவருடைய உடல் நிலை திடீரென கடந்த 14ம் தேதி கவலைக்கிடமானது. தற்போது எஸ்.பி.பி.க்கு வென்டிலேட்டர்  சப்போர்ட் உடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக்குழுவினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண நலமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென ரஜினிகாந்த், கமல் ஹாசன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பாரதிராஜா, சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும்  நாளை (20-8-2020(வியாழக்கிழமை))  மாலை 6 மணிக்கு  எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு திரையுலகினர் மற்றும் பொதுமக்களுக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதையும் படிங்க: “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் அன்பு ரசிகப்பெரு மக்களே. உலகம் எல்லாம் இருக்கும் இசைப்பிரியர்களே. உங்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள். பிரார்த்தனை என்பது சக்திவாய்ந்தது. உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஒரே விஷயத்திற்காக வேண்டும் போது அதன் சக்தியே தனி. அதன் மூலம் பலர் மீண்டு வந்துள்ளனர். அதற்கு பல ஆதாரங்கள் இருக்கு. நம்ம எஸ்.பி.பி. சாருக்காக பிரார்த்திக்கலாம். நாளை மாலை 6 மணிக்கு அவருக்காக பிரார்த்தனை செய்யலாம். ஆயிரம் நிலவே வா என பாடியவர் ஆயிரம் பிறைகள் காண வேண்டாமா?. கேவலம் இந்த கொரோனாவுக்காக அவர் பலியாக கூடாது. அவருக்காக நாம் வேண்டுவோம் என கோரிக்கை விடுத்துள்ளார்.