நடிகர் ரோபோ சங்கர் தன் மகள் ‘பிகில்’படத்தில் நடித்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணீர்ப் பதிவு எழுதியிருந்த நிலையில், அப்படத்தில் விஜய்யின் அக்காவாக நடித்துள்ள தேவதர்ஷினி அதே படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனது மகள் இழந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘96 படத்தில் நடித்த தேவதர்ஷினியின் மகள் நியதி அவரது துடிப்பான நடிப்புக்காக பெரிதும் சிலாகிக்கப்பட்டார். ஆனால் அப்படத்துக்கு அடுத்து வந்த வாய்ப்புகளை படிப்புக்காக கைவிட நேர்ந்தது. அந்தப் படங்களில் விஜய்யின் பிகிலும் ஒன்று. இயக்குநர் அட்லி ‘96 படம் பார்த்துவிட்டு தன் மகளுக்கு ஒரு முக்கிய கேரக்டர் இருக்கிறது என்று அழைத்தபோது அவர் 10ம் வகுப்பு தேர்வு எழுத வேண்டியிருப்பதால் ‘நோ சொன்னதாக தேவதர்ஷினி அப்போதே கூறியிருந்தார்.

தற்போது பிகிலில் விஜயின் அக்காவாக நடித்து முடித்திருக்கும் தேவதர்ஷினி அதுகுறித்து இன்னொரு சுவாரசியமான தகவலையும் வெளியிட்டார். அதில்,...’பிகில்  படத்தில் என் மகளும் சிங்கப்பெண்களில் ஒருவராக நடிக்க வேண்டியது. ஆனால்  அவளுக்கு 10ஆம் வகுப்பு தேர்வு இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. என் மகள் விஜய்யின் தீவிர ரசிகை. என்னுடன் ஒருநாள் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாள். ஆனால் பிஸியாக  ஷூட்டிங் சென்று கொண்டிருந்ததால் போட்டோ எடுக்க சந்தர்ப்பம் கிட்டவில்லை. சிறிது நேரம் கழித்து விஜய் என்னிடம் வந்து ’96 படத்துல உங்கள விட உங்க பொண்ணு நல்லா நடிச்சிருந்தாங்க. நான்  சொன்னேன்னு சொல்லிடுங்கஅப்படினு சொன்னாரு. உடனே  நான் அவ இங்க தான் இருக்கா. நீங்களே சொல்லிடுங்கன்னு விஜய் சார்கிட்ட சொன்னேன். அப்புறம் விஜய் சாரும், நியதியும் 10 நிமிஷம் பேசினாங்க’ என்றார்.