ஜெயிச்சுட்ட மாறா... முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் சூர்யா
சூரரைப் போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
68-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் இந்தியா முழுவதிலும் இருந்து 295 திரைப்படங்கள் இந்த விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் இருந்து 66 திரைப்படங்களும், 140க்கும் மேற்பட்ட டாக்குமெண்டரி படங்களையும் ஜூரி மெம்பர்கள் பார்த்தனர்.
அதில் இருந்து சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்தவகையில் 10 ஜூரி மெம்பர்களும் இன்று காலை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து தேசிய விருது வென்றவர்களின் பட்டியலை வழங்கினர். அதில் இடம்பெற்றுள்ள வெற்றியாளர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
இதையும் படியுங்கள்... 5 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் சூரரைப் போற்று - யார் யாருக்கு என்ன விருது.. முழு விவரம்
அதன்படி சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடி-யில் வெளியிடப்பட்ட சூரரைப் போற்று திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா தேசிய விருதை வெல்வது இதுவே முதன்முறை ஆகும்.