பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சீராகி வந்த அவருடைய உடல் நிலை திடீரென கடந்த 14ம் தேதி கவலைக்கிடமானது. தற்போது எஸ்.பி.பி.க்கு வென்டிலேட்டர்  சப்போர்ட் உடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவக்குழுவினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண நலமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென ரஜினிகாந்த், கமல் ஹாசன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பாரதிராஜா, சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும்  நாளை (20-8-2020(வியாழக்கிழமை))  மாலை 6 மணிக்கு  எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு திரையுலகினர் மற்றும் பொதுமக்களுக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

இதையும் படிங்க: “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது சோசியல் மீடியா பக்கத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.

இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர். இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ் பி பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.

இதையும் படிங்க:  "கொரோனாவுக்காக எஸ்.பி.பி.பலியாக கூடாது"... கூட்டு பிரார்த்தனைக்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்ட விவேக்!

லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் 'பாடும் நிலா' எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ் பி பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்... என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.