வம்புத்தம்பி சிம்புவுக்காக ஒருவருடத்துக்கும் மேல் காத்திருந்து நொந்துபோன நிலையில் அப்படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுவிட்டார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் அவரை ‘நீங்க என்ன பெரிய ஏ.வி.எம்மா, லைகாவா? முதல் படத்தையே ரிலீஸ் பண்ண முடியாமா முழிக்கிறவர்தான??என்று மகனுக்காக வக்காலத்துக்கு வாங்கியிருக்கிறார் அவரது மம்மி உஷா ராஜேந்தர்.

‘மாநாடு’படத்துக்காக சிம்புவுக்காக காத்திருந்த துயரம் பெரிய அளவில் எதுவும் புலம்பாமல், ...காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்’என்று தனது முகநூல் பதிவில் தயாரிப்பாளர் வெளியிட அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வழிமொழிந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இந்த நாகரிகமான அறிவிப்பால் கொதித்துப்போன சிம்பு ரசிகர்கள் ‘தல’க்கு ‘மங்காத்தா’கொடுத்த வெங்கட் பிரபு மாதிரி ஒரு நல்ல டைரக்டரைக்கூட இழக்குற உங்கள நம்பிக்காத்திருக்கிறது ரொம்ப வெறுப்பா இருக்கு. எப்பத்தான் ஹிட் படம் கொடுத்து எங்க மானத்தை காப்பாத்தப்போறீங்க?என்று புலம்ப ஆரம்பித்தார்கள்.

இதை சற்றும் எதிர்பாராத சிம்பு வட்டாரம் நேரடியாக பதிலடிகொடுக்காமல் மவுனம் காக்க அவரது தாய் உஷா ஒரு பிரபல இணையதளத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார் அதில், ”சிம்பு ‘மாநாடு’ படத்திற்காக கொடுத்த தேதியில் சுரேஷ் காமாட்சியால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. காரணம் அவருக்கு பைனான்ஸ் பிரச்சினை. இதனால் சிம்பு காத்திருந்தார். ஒரு கட்டத்தில் மாநாடு படப்பிடிப்பு நடக்கவில்லை என்ற கோபத்தில் தான், அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடும் போதே, சனி,ஞாயிற்றுகிழமைகளில் படப்பிடிப்புக்கு வர மாட்டேன், என்று தெரிவித்துவிடும் சிம்பு, சுரேஷ் காமாட்சிக்காக சனி, ஞாயிற்றுகிழமையிலும் படப்பிடிப்புக்கு வர சம்மதித்தார். இருந்தாலும், படப்பிடிப்பு தொடங்குவதில் சுரேஷ் காமாட்சி தரப்பு தொடர்ந்து காலதாமதம் செய்ததால் தான், சிம்பு வெறுத்துப்போய்விட்டார்.சுரேஷ் காமாட்சி ஏவிஎம், லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனம் அல்ல, ‘மிக மிக அவசரம்’ என்ற ஒரு படத்தை தயாரித்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பவரை, தூக்கிவிட வேண்டும் என்பதற்காக தான் சிம்பு அவருக்கு கால்ஷீட் கொடுத்தார். ஆனால், அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.