சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பிராந்திய மொழிப் படங்களே இப்போது சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கின்றன என்று நடிகரும், மாநிலங்களவை எம்பி-யுமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.

Kamal Haasan Praises Pan India Movies : பிராந்திய மொழிப் படங்களே இப்போது சர்வதேசப் படங்களாக மாறி வருகின்றன என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்ச்சியின் போது கமல்ஹாசன் இவ்வாறு பேசினார். மொழித் தடைகளைத் தாண்டி பிராந்தியப் படங்கள் உலகின் பல்வேறு மூலைகளையும் சென்றடைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது : "பிராந்திய மொழிப் படங்களே இப்போது உண்மையான சர்வதேசப் படங்களாக மாறி வருகின்றன. மதுரை, மலப்புரம், மாண்டியா, மச்சிலிப்பட்டினம் போன்ற இடங்களில் இருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார அடையாளங்கள். மொழித் தடைகளைத் தாண்டி அத்தகைய படங்கள் உலகின் பல்வேறு மூலைகளுக்கும் சென்றடைகின்றன. தெற்கு கர்நாடகாவின் வேர்களை ஆழமாகச் சொன்ன 'காந்தாரா' நாடு முழுவதையும் கவர்ந்தது. 

பிற மொழி படங்களை புகழ்ந்த கமல்ஹாசன்

மலையாள மிஸ்டரி த்ரில்லரான 'த்ரிஷ்யம்' ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண சக்திகளைக் காட்டியது, அது எளிதாக மொழி எல்லைகளைக் கடந்தது. மும்பை முதல் மலேசியா வரை 'புஷ்பா', 'பாகுபலி' போன்ற தெலுங்குப் படங்களின் வசனங்கள் தினசரிப் பயன்பாட்டு வார்த்தைகளாக மாறிவிட்டன" என்று கமல்ஹாசன் கூறினார்.

இதற்கிடையில், மணிரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' தான் கமல்ஹாசனின் கடைசியாக அறிவிக்கப்பட்ட படம். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கூட்டணி இணையும் புதிய படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முதலில் சுந்தர் சி இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் அவர் விலகினார். 

'பார்க்கிங்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன், ரஜினியிடம் கதை கூறியதாகவும், பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், நித்திலன் சாமிநாதன் பெயரும் அடிபடுகிறது. 'குரங்கு பொம்மை', 'மகாராஜா' ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நித்திலன் சாமிநாதன். முன்னதாக தனுஷின் பெயரும் இந்தப் படம் தொடர்பான விவாதங்களில் அடிபட்டது.