நடிகர் ராஜேஷின் மறைவால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.
Actor Rajesh passes away: Film industry pays tribute! நடிகர் ராஜேஷ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். தமிழில் 150 படங்களில் நடித்துள்ள அவர், 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும், எழுத்தாளராகவும் பயணித்து உள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். ராஜேஷின் மறைவுக்கு திரைப்பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் இரங்கல்
ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.
எம்.பி. கார்த்திக் சிதம்பரம் இரங்கல்
காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் போட்டுள்ள இரங்கல் பதிவில், “'கன்னிப் பருவத்திலே' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி 150க்கும் மேலான திரைப்படங்களில் நடித்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்த திரு.ராஜேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என தனது முத்திரையைப் பதித்தவர் திரு. ராஜேஷ் அவர்கள்.
அவரது இறப்பு தமிழ் திரையுலகத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பே. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
டி.ராஜேந்தர் இரங்கல்
நடிகர் ராஜேஷ் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் திரையுலகில் நடிகர் ராஜேஷ் அவர்கள் நடிப்பாற்றல் கொண்டவர், பேச்சாற்றல் மிக்கவர், தனித்தன்மை பெற்றவர், தனக்கென்று தனி முத்திரை பதித்தவர், பன்முகக் கலைஞர், பண்பு மிக்க உள்ளம் நிறைந்தவர், தமிழ் திரையுலகில் தமிழை நன்றாக உச்சரிக்கக்கூடிய அற்புதமான கலைஞர்.
அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய குடும்பத்தினருக்கும், கலையுலகத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் இரங்கல்
தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
