கமல் 60’விழா நிகழ்வுகளைத் தொடர்ந்து கமல் கட்சியில் ரஜினி இணைவாரா அல்லது ரஜினியும் கமலும் கூட்டுச் சேருவார்களா என்ற டாபிக் சூடு பிடித்துள்ள நிலையில், நடிகர் பிரபு, அவர்கள் இருவரும் கண்டிப்பாக ஒன்று சேரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமலின் பிறந்தநாள் விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பற்ற வைத்த நெருப்பொன்று தமிழக அரசியலில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அதையொட்டி நாளை அவசியம் ஏற்படுமானால் ரஜினியும் கமலும் இணைந்தே திமுக, அதிமுகவை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இச்செய்திகளை இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமாகவே பகிர்ந்துவருகிறார்கள்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள நடிகர் பிரபு''ரஜினியும் கமலும் ரொம்ப நல்லவர்கள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் காட்டி வரும் மக்களுக்காக அவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதில் அண்ணன் கமல் தற்போது இறங்கியுள்ளார். அண்ணன் கமல் இறங்கியது பெரிய விஷயம். அதே மாதிரி அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இறங்கினால் மிக்க மகிழ்ச்சி. அதற்குப் பிறகு திரளும் கூட்டத்தையும் திரையுலகினரின் ஒத்துழைப்பையும் பார்க்கலாம்.ரஜினி, கமலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கமல் அரசியலுக்கு வந்துவிட்டார், எப்போது ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நான் எங்கே போனாலும், மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் இருக்கலாம். ஆனால், அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவர்கள் இணைந்தால் நான் பெரிதாக வரவேற்பேன்.

65 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கும் கமலை தனது அன்னை இல்லத்துக்கு வரவழைத்து முதன்முதலாக தடபுடல் விருந்து வைத்துக் கொண்டாடியது பிரபு குடும்பத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.