மீண்டும் பயோபிக்கில் நடிக்கும் மாதவன்; இப்போ யார் கதை தெரியுமா?
ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்திற்கு பிறகு நடிகர் மாதவன் நடித்து வரும் மற்றொரு பயோபிக் படம் பற்றிய புதிய அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதனால் நடிகர் மாதவனை புதிய லுக்கில் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

சென்னை : ராக்கெட்ரி-தி நம்பி எஃபெக்ட் படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு பயோபிக்கில் நடித்து வருகிறார் நடிகர் மாதவன். இந்த படத்தின் வேலைகள் எந்த நிலையில் உள்ள அப்டேட்டை கொடுத்துள்ளார் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர்.
2022ம் ஆண்டு ரிலீசான ராக்கெட்ரி:தி நம்பி எஃபெக்ட் படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்திருந்தார். விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை தானே இயக்கி, நடித்திருந்தார் மாதவன். இதில் அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருந்தார். இந்த படத்திற்காக மாதவனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது மற்றொரு பயோபிக்கில் மாதவன் தீவிரமாக நடித்து வருகிறார். விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக 2024ம் ஆண்டே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
ஜி.டி.நாயுடு பயோபிக்கில் மாதவன் :
ஜி.டி.நாயுடு படத்தின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் முரளிதரன் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த படத்தின் 95 சதவீதம் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது. இவை முழுக்க முழுக்க கலாச்சார பின்னணி கொண்ட இடங்களில் எடுக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 5 சதவீதம் ஷூட்டிங் வெளிநாட்டில் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய சிறிய பகுதியை எடுத்து முடித்து விட்டோம். மீதமுள்ள காட்சிகள் எடுக்க வேண்டி உள்ளது என்றார்.
5 ஆண்டு ஆய்வு :
இந்தியாவில் எடுக்க வேண்டிய பகுதியின் ஷூட்டிங் பிப்ரவரி 18ம் தேதி துவங்கும். அதற்கு பிறகு தான் மற்ற விபரங்கள், படத்தின் டைட்டில் ஆகியவை அறிவிக்கப்படும். இது ஜி.டி.நாயுடுவின் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையை பற்றிய படம். இதற்காக மிகவும் மெனக்கெட்டுள்ளோம். இந்த படத்திற்காக டைரக்டரும் அவரது டீமும் கிட்டதட்ட 5 ஆண்டுகள் ரிசர்ச் செய்த பிறகு தான் படத்தின் கதையை உருவாக்கி, ஷூட்டிங் வேலைகளை துவக்கி உள்ளனர் என்றார்.
மாதவனை தேர்வு செய்தது ஏன்?
இந்தியாவின் எடிசன் என்றும், கோவையின் செல்வ உற்பத்தியாளர் என்றும் போற்றப்படும் ஜி.டி.நாயுடு, பல கண்டிபிடிப்புக்களை நாட்டிற்கு அளித்துள்ளார். இந்தியாவில் முதல் மின் மோட்டாரை தயார் செய்தவர் இவர் தான். இவரது கதையில் நடிப்பதற்கு யார் பொருத்தமாக இருப்பார் என யோசித்த போது, ராக்கெட்ரி படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாதவன் தான் நினைவிற்கு வந்தார் என்றார் படத்தின் எக்ஸிக்யூடிவ் டைரக்டர். இன்னும் பெயரிடப்படாத இந்த பயோபிக்கை வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மோகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மாதவன் மற்றும் சரிதா மாதவனின் டிரைகலர்ஸ் பிலிம்ஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்த தயாரித்து வருகிறது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.