actor kamal hassan in ennur area and check the kazhimugam

கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் , கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்ரைவிட பன்மடங்கு பெரிய ஆறு.

அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.

வல்லூர் மின் நிலையமும் வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கோசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்ப முற்பட்டதும் செவிடர் காதில் ஊதிய சங்குதான் என தெரிவித்துள்ள கமல், பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணெய் முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன என தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கோசஸ்தலையாற்று கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விபடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும், உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல்ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள் தான் என்றும் வழக்கமாக வரும் மழை போன வருடம் போல் பெய்தாலே வடசென்னைக்கு பெரும் ஆபத்து வந்துவிடும் என்றும் தெரிவித்திருந்தார். 



எனவே தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காப்பதே நல்லது என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் இன்று அதிகாலை 5 மணிக்கு பார்வையிட்டார். மேலும் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கமல்ஹாசன் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்த கமல், இன்று அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.