‘சமூக வலைதளங்களை சிலர் மிகவும் தவறான விஷயங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். சினிமாவில் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தில் நான் கட்டிய வீட்டை நானே சேதப்படுத்துவேனா? விஷமத்தனமாய் எழுதுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? என்கிறார் நடிகர் தாடி பாலாஜி.

இடையில் சிறிது காலம் அமைதி நிலவிய நடிகர் தாடி பாலாஜியின் வாழ்க்கையில் மீண்டும் அவரது மனைவி ரூபத்திலேயே புயலடிக்க ஆரம்பித்துள்ளது. தாடி பாலாஜி தன்னை  ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக அவர் போலீஸில் புகார் செய்தனர். இதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்த பாலாஜி நேற்று தன் தரப்பு நியாயங்களை புகாராகக்கொடுக்க கமிஷனர் அலுவலகம் வந்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,“உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் விசாரணைக்கு கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானேன். எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. எனது குடும்ப வாழ்க்கையில் புகுந்து பிரச்சினைகளை உருவாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது இந்த நடவடிக்கை போதாது. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பத்தை கெடுத்த அவருடைய நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவர் இன்னொரு குடும்பத்தை இனிமேல் கெடுக்காத அளவுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை கேட்டுக்கொள்கிறேன்.

எனது மனைவியுடன் உள்ள பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக்கொள்வேன். எனது மகளை நன்றாக படிக்க வைக்க உதவி செய்வேன். எனது வீட்டில் தாக்குதல் நடத்தியதாக என் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் செலவழித்து கட்டிய வீட்டை நான் எப்படி சேதப்படுத்துவேன். சமூக வலைதளங்களை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சினிமா இல்லாவிட்டால், இந்த தாடி பாலாஜியை யாரும் மதிக்கமாட்டார்கள். சினிமாதான் என்னை இந்த அளவுக்கு வாழ வைத்துள்ளது” என்று நிருபர்களிடம் கூறினார் பாலாஜி.