Asianet News TamilAsianet News Tamil

எம்ஜிஆர் முதல் விஜய் வரை: ஆச்சி மனோரமாவின் அற்புதங்கள் என்னென்ன?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்து வளர்ந்த ஆச்சி மனோரமா, டி ஆர் மகாலிங்கம், எஸ்.எஸ்.ஆர்., எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விக்ரம், அஜித் குமார், விஜய் ஆகிய மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Achi Manorama acted with SSR, TR Mahalingam, MGR, Shivaji Ganesan, Rajinikanth in more than 1500 films
Author
First Published Dec 26, 2022, 4:35 PM IST

கடந்த 1937 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர் மனோரமா. இவரை ஆச்சி என்றும் அழைப்பது உண்டு. மன்னார்குடியிலிருந்து காரைக்குடியில் சொந்தமாக வீடு வாங்கி அங்கு குடி பெயர்ந்தனர். தனது அம்மாவை காப்பாற்ற 11ஆவது வயதில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மனோரமா வீட்டு வேலை செய்து வந்தார். காரைக்குடியில் பல்லத்தூர் பகுதியில் டிராமா குரூப் இருப்பதை தெரிந்து கொண்ட மனோரமா அங்கு முயற்சித்தார். பாடுவதிலும், நடிப்பதிலும் திறமை கொண்டிருந்த மனோரமாவை அந்த குரூப் ஏற்றுக் கொண்டது.

அந்தமான் காதலி என்ற டிராமாவில் நடித்தார். அவரது நடிப்புத் திறமையை பாராட்டிய டிராமா இயக்குநர் திருவேங்கடம், ஹார்மோனிஸ்ட் தியாகராஜன் ஆகியோர் மனோரமாவை எஸ் எஸ் ராஜேந்திரனை சந்திக்கும்படி கூறினர். மனோரமாவும் அவரை சந்திக்க, எஸ் எஸ் ஆரும், மனோரமாவுக்கு கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட மணி மகுடம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மனோரமாவிற்கு வழங்கப்பட்டது. இதுதான் அவரது முதல்படம்.

உருவத்திற்கும் நடிப்பிற்கும் எந்த சமந்தமும் இல்லை: அப்போ நாகேஷ், இப்போ யோகி பாபு!

அதன் பிறகு இன்பவாழ்வு படத்தில் நடித்தார். அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதே போன்று உண்மையின் கோட்டை என்ற படத்திலும் நடித்தார். அந்தப் படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் மனோரமா டிராமா குரூபின் மேனேஜராக இருந்த எஸ்.எம்.ராமநாதனை காதலித்து கடந்த 1954 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 1955 ஆம் ஆண்டு பூபதி என்ற மகன் பிறக்கவே, 1956 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தனது அம்மா தன்னை மருத்துவம் படிக்க சொன்னதாகவும், அன்றைய காலகட்டத்தில் அது முடியாத நிலை என்றும், ஆனால், எனது பேரன் ஒரு டாக்டர் என்று மனோரமா கூறி மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும் நாடக குரூபில் இணைந்தார். இந்த முறை வைரம் நாடக சபா. அப்போது எஸ் எஸ் ஆர் புதுக்கோட்டையில் இருந்தார். அந்த காலத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு மனோரமாவிற்கு கிடைக்க, அதன் பிறகு விட்டுப் போன படத்தின் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு மனோரமாவிற்கு கிடைத்தது. அந்த படம் தான் மணி மகுடம்.

டாப் லெவலில் வாரிசு படத்தின் ஜிமிக்கு பொண்ணு சாங்!

கடந்த 1958 ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற படத்தின் மூலம் மனோரமாவை ஹீரோயினாக நடிக்க வைத்து அழகு பார்த்தவர் கண்ணதாசன். அதன் பிறகு கொஞ்சும் குமரி என்ற படத்திலும் முன்னணி ரோலில் நடித்தார். கடந்த 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். நகைச்சுவை நடிகர் நாகேஷ் உடன் இணைந்து 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1947 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சுமங்கலி என்ற சிங்களத்து படத்தில் ஹீரோயினுக்கு தோழி கதாபாத்திரத்தில் நடித்தார். வல்லவனுக்கு வல்லவன் படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து காமெடியிலும் சரி, சிறந்த கதாபாத்திரத்திலும் சரி தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி மாஸ் காட்டியிருந்தார்.

1960 முதல் 1969 ஆம் ஆண்டுகளில் நாகேஷ் உடனும், 1970 முதல் 1980 ஆம் ஆண்டுகளில் சோ உடனும், 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளி ராஜன் ஆகியோர் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் பின்னணி பாடலும் பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கும், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 1500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 5000க்கும் அதிகமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய விருது, கலைமாமணி விருது, பத்ம ஸ்ரீ விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

கடந்த 1996 ஆம் ஆண்டு தேர்தலில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருங்கிய தோழி ஆச்சி மனோரமா என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் தைரியம், கறை படியாத கரங்கள் ஆகியவற்றின் காரணமாக அவருக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். தனது சினிமா வரலாற்றில் எஸ் எஸ் ஆர், டி ஆர் மகாலிங்கம், எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக், விக்ரம், பிரசாந்த், விஜய், அஜித் குமார் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். 

கடந்த 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மனோரமா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ஆச்சி மனோரமா இந்த விண்ணுலகை விட்டு பிரிந்து சென்றார். ஆனால், இன்னும் சினிமாவின் மூலமாக கோடிக்கணக்கான இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios