ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மந்தமாக வசூலித்து வரும் நிலையில், அதன் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
Ace Movie Box Office : பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த ஒரு ரோல் கொடுத்தாலும் அதில் தன்னுடைய 100 சதவீத உழைப்பை போட்டு அசர வைப்பார். இவர் சமீப காலமாக வில்லன் வேடங்களில் நடிப்பதை குறைத்து முழுவதுமாக ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் விடுதலை 2 மற்றும் மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதில் மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முதல் படம் ஏஸ். ஆறுமுககுமார் இயக்கிய இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த், யோகி பாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விஜய் சேதுபதி 'போல்ட் கண்ணன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

வசூலில் சொதப்பிய ஏஸ்
விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. ஆரம்பத்தில் இருந்தே மந்தமாக வசூலித்து வந்த இப்படம் ஒரு வாரத்தில் 6.47 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்படம் விஜய் சேதுபதிக்கு தோல்விப் படமாக அமையும் என கூறப்படுகிறது. முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட ஏஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனதற்கு அதன் புரமோஷனே காரணம். இப்படத்திற்கு பெரியளவில் புரமோஷன் செய்யப்படாததே அதன் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு மாஸ் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக மலேசியாவில் எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தப் படம், அற்புதமான சண்டைக் காட்சிகளுடனும், காமெடி நிறைந்தும் இருந்தது. விமர்சன ரீதியாக ஏஸ் தப்பித்தாலும் வசூல் ரீதியாக சொதப்பி உள்ளது. கரண் பகத் ரௌத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பின்னணி இசை சாம் சி.எஸ் அமைத்துள்ளார்.
