69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை கடைசி விவசாயி திரைப்படம் பெற்றுள்ளது.
தேசிய திரைப்பட விருதுகள், ஒவ்வொரு வருடமும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரையுலக பிரபலங்கள் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் இந்த விருதை, பெற வேண்டும் என்பது திரையுலகை சேர்ந்த ஓவ்வொரு பிரபலத்திற்கும் கனவு என கூறலாம், இந்நிலையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி வருகிறது.
டெல்லியில் தற்போது தேசிய விருது அறிவிப்பு நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில். இதில் 2021-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த பிக்க்ஷன் படத்திற்கான விருதை, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படம் சிறந்த பிராந்திய மொழியில் படத்திற்கான விருதை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர் நல்லாண்டிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நல்லாண்டி, ஒரு அப்பாவித்தனமான விவசாயி கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருந்தார். அவரின் எதார்த்தமான பேச்சும், நடையும் பார்ப்பவர்களை அந்த படத்தின் உள்ளே கொண்டு செல்லும் வகையில் இருந்தது. ஆனால் ஒரு சோகம் இந்த படம் வெளியாவதற்கு முன்பே அவர் உடல் நல குறைவால் இறந்தார். இவரின் நடிப்புக்கு தற்போது மகுடம் சூட்டும் விதமாக தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
