12 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட அவதூறு வழக்கில்... ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை
அல்லு அர்ஜுனின் தந்தை தொடர்ந்த அவதூறு வழக்கில் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜசேகர். இவர் தமிழில் ரஜினி, கமலுடன் நடித்து பிரபலமான நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகின்றனர். நடிகை ஜீவிதா தற்போது லால் சலாம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கும், அவரது கணவர் ராஜசேகருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை விற்பதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தனர் ராஜசேகர் ஜீவிதா தம்பதி. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... துணிவு முதல் மாவீரன் வரை.. தொட்டதெல்லாம் ஹிட்டு! 6 மாதத்தில் 6 பிளாக்பஸ்டர் மூவீஸ்- மாஸ் காட்டும் ரெட் ஜெயண்ட்
இதையடுத்து சிரஞ்சீவியின் மைத்துனரும், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் கடந்த 2011-ம் ஆண்டு ஜீவிதா - ராஜசேகர் தம்பதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ராஜசேகர் - ஜீவிதா தம்பதியினருக்கு ஒராண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நம்பள்ளி 17வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் ஜீவிதாவும், ராஜசேகரும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அபராதத் தொகையை கட்டிய அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... நண்பேண்டா... சிவகார்த்திகேயனுக்கு விஜய் சேதுபதி செய்தது போல் விஷாலுக்காக களமிறங்கிய பிரபலம்