ஒடிசா ஊரக வளர்ச்சித் துறை தலைமைப் பொறியாளர் பைக்குந்த் நாத் சாரங்கிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.2.1 கோடி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஒடிசா ஊரக வளர்ச்சித் துறை தலைமைப் பொறியாளர் பைக்குந்த் நாத் சாரங்கிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். புவனேஸ்வர், அங்குல், பூரி உள்ளிட்ட 7 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.2.1 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.2.1 கோடி பறிமுதல்
சாரங்கி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகப் புகார் எழுந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. புவனேஸ்வரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் வந்தபோது, ஜன்னல் வழியாக ரூ.500 நோட்டுக் கட்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. புவனேஸ்வரில் ரூ.1 கோடியும், அங்குலில் ரூ.1.1 கோடியும் என மொத்தம் ரூ.2.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்
சோதனை தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரிகள் திரட்டத் தொடங்கியுள்ளனர். சாரங்கியின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்தும் மதிப்பீடு செய்யப்படும் எனவும், விசாரணையின் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


