முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள சேவூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 6 முதல் அவரது வீடு மற்றும் மகன்களின் வீடுகளில் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ

இந்த சூழலில் மற்றொரு அதிமுக நிர்வாகி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியை உட்பட்ட 22வது வார்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பி.நீதிபதி. அதிமுக சார்பில் கடந்த 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக பதவி வகித்தார்.

சொத்து குவிப்பு வழக்கு

தற்போது வரை உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் எம்எல்ஏவாக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக தனது மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி மற்றும் மகன் இளஞ்செழியன் ஆகியோரது பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக கண்னன் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் இன்று காலை 8 மணி முதல் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சம்பவத்தை அறிந்த ஆதரவாளர்கள் அவரது வீடு முன்பு காலை முதல் குவிந்து வருகின்றனர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.