Honda 0 Alpha : ஹோண்டாவின் முதல் EV! இந்தியாவில் எப்போது அறிமுகம்? என்ன விலை?
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், தனது முதல் முழுமையான எலக்ட்ரிக் வாகனமான (BEV) ஹோண்டா 0 α (ஆல்ஃபா) எஸ்யூவியின் சோதனை ஓட்டத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

Honda electric car
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், தனது முதல் முழு எலக்ட்ரிக் காரான (BEV) ஹோண்டா 0 α (ஆல்ஃபா) எஸ்யூவியை இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் கான்செப்ட் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், இந்தியாவிற்கான ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் வாகனமாக களமிறங்க உள்ளது.
இந்தியாவின் நெடுஞ்சாலைகள், நகரச் சாலைகள் மற்றும் கரடுமுரடான பாதைகள் என பல்வேறு விதமான சூழல்களில் இந்த காரின் செயல்திறனை சோதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார், ராஜஸ்தானில் உள்ள தபுகரா ஆலையில் உள்நாட்டு மற்றும் உலகச் சந்தைகளுக்காக தயாரிக்கப்பட உள்ளது. இந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திட்டத்திற்காக சுமார் ரூ.1,200 கோடி முதலீடு செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும்போது, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் சந்தைகளாக இருக்கும்.
டிசைன் எப்படி இருக்கு?
ஹோண்டாவின் 'தின், லைட், மற்றும் வைஸ்' (Thin, Light, and Wise) என்ற புதிய டிசைன் கொள்கையின் அடிப்படையில் இந்த 0 α எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட தயாரிப்புக்குத் தயாரான மாடலாகவே தெரிகிறது. இதன் இறுதி வடிவமும் அகலமான, அதே சமயம் எடை குறைந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிரும் ஹோண்டா லோகோ, தனித்துவமான முன்பக்க கிரில், கூர்மையான முன்பக்க விண்ட்ஸ்கிரீன், காற்றைக் கிழித்துச் செல்லும் வகையிலான (ஏரோ-ஆப்டிமைஸ்டு) 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கம்பீரமான வீல் ஆர்ச்கள் இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
மேலும், பக்கவாட்டில் சார்ஜிங் போர்ட், உயரமான பின்பக்க விண்ட்ஸ்கிரீன், முழு அகலத்திற்கு நீளும் U-வடிவ டெயில் லைட்டுகள் மற்றும் ஃபாக்ஸ் பேஷ் பிளேட் உடன் கூடிய பின்பக்க பம்பர் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்புற வசதி மற்றும் பேட்டரி
ஹோண்டா 0 α எஸ்யூவியின் உட்புற அமைப்பு மற்றும் இன்ஜின் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், காருக்குள் அதிக இடவசதியை உறுதி செய்வதற்காக, இதன் வீல்பேஸ் சுமார் 2,700 மிமீ முதல் 2,800 மிமீ வரை இருக்கும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி, இரண்டு விதமான LFP (லித்தியம் அயர்ன் பாஸ்பேட்) பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வரும் என கூறப்படுகிறது. பேட்டரியின் திறன் 65kWh முதல் 75kWh வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
விலை மற்றும் போட்டியாளர்கள்
அறிமுகம் செய்யப்படும்போது, ஹோண்டா 0 ஆல்ஃபா எஸ்யூவி, மஹிந்திரா BE 6, ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், மாருதி இவிடாரா, டாடா கர்வ் EV, எம்ஜி ZS EV மற்றும் வரவிருக்கும் டொயோட்டா இ-பெல்லா போன்ற கார்களுக்குப் போட்டியாக இருக்கும். இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.25 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

