- Home
- Auto
- டிச.15 முதல் கார், பைக் இன்சூரன்ஸில் அதிரடி மாற்றம்: இனி 4 வகையான காப்பீடுகள்; எது கட்டாயம், எது விருப்பம்?
டிச.15 முதல் கார், பைக் இன்சூரன்ஸில் அதிரடி மாற்றம்: இனி 4 வகையான காப்பீடுகள்; எது கட்டாயம், எது விருப்பம்?
டிச.15 முதல் கார், பைக் இன்சூரன்ஸில் புதிய விதிகள் அமல். இனி 4 வகையான காப்பீடுகள், எது கட்டாயம், பிரீமியம் உயருமா? IRDAI வெளியிட்ட முழு விவரங்களை பற்றி பார்ப்போம்.

கார் பைக் இன்சூரன்ஸ் புதிய விதிகள்
எதிர்பாராத விபத்துகள் ஏற்படும்போது வாகன உரிமையாளர்களுக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும் நிதிப் பாதுகாப்பு அளிப்பதில் மோட்டார் இன்சூரன்ஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், வரும் டிச.15 முதல் இந்தியாவில் மோட்டார் இன்சூரன்ஸ் நடைமுறையில் முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டில் 4 அடுக்கு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு எந்தெந்த அம்சங்களை உள்ளடக்குகிறது என்பதை வாடிக்கையாளர்கள் தனித்தனியாகப் புரிந்துகொண்டு தேர்வு செய்ய முடியும்.
புதிய நடைமுறை
இந்த புதிய நடைமுறையின்படி, மோட்டார் இன்சூரன்ஸ் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. 3-ம் நபர் காப்பீடு, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கான பொறுப்புக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் சொந்த வாகனத்திற்கான சேதக் காப்பீடு ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறு வகையான நிதிப் பாதுகாப்பை வழங்கும்.
இந்த மாற்றங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை IRDAI கடந்த 2-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது. வரும் டிச.15 முதல் புதிதாக வழங்கப்படும் பாலிசிகளுக்கு இந்த நடைமுறை பொருந்தும். தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.
1. 3-ம் நபர் காப்பீடு
3-ம் நபர் காப்பீடு (Third Party Insurance) ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டாயக் காப்பீடாக இருந்து வருகிறது. வாகனத்தால் மற்றொருவருக்கு விபத்தில் ஏற்படும் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் ஆகியவற்றிற்கு சட்டப்பூர்வப் பொறுப்புகளையும், இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்தக் காப்பீடு வழிவகுக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை.
2. பயணிகள் காப்பீடு
காரில் பயணிக்கும் நபர்கள், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணிக்கும் நபர்கள் மற்றும் வாகன உரிமையாளரின் ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சட்டப்பூர்வப் பொறுப்புகளை இந்தக் காப்பீடு மூலமாக இழப்பீடு வழங்கப்படும். குறிப்பாக, பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு விரும்பும் உரிமையாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்தக் காப்பீடு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இது கட்டாயமாக எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
3. தனிநபர் விபத்துக் காப்பீடு
வாகனத்தின் உரிமையாளர் மற்றும் காப்பீடு பெற்ற நபருக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal Accident Cover) 3-வது பிரிவாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 3-ம் நபர் காப்பீடு போன்று இதுவும் கட்டாயமாக்கப்படுகிறது.
4. சொந்த வாகனத்திற்கான காப்பீடு
சொந்த வாகனத்திற்கு சேதக் காப்பீடு (Own Damage Insurance) என்பது 4-வது பிரிவாக இருக்கும். விபத்து, வாகனத் திருட்டு, தீ விபத்து மற்றும் இயற்கைப் பேரிடர்களால் கார் அல்லது பைக்கிற்கு ஏற்படும் சேதங்களுக்கு இந்த பாலிசியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இழப்பீடு கிடைக்கும். இந்தக் காப்பீடும் கட்டாயமில்லை என்று தெளிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகனத்தின் மதிப்பு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து உரிமையாளர்கள் முடிவெடுக்கலாம்.
பிரீமியம் உயருமா?
புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார் மற்றும் பைக் இன்சூரன்ஸ் கட்டணம் உயருமா என்ற கேள்வி வாகன உரிமையாளர்களிடம் எழுந்துள்ளது. ஆனால், IRDAI இதுவரை புதிய நடைமுறையால் பிரீமியம் கட்டணம் உயர்த்தப்படும் அல்லது குறைக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. சொந்த வாகன சேதக் காப்பீட்டுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதில் நிறுவனங்கள் சொந்தமாக முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், டிச.15-ம் தேதிக்குள் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் பீமா சுகம் (Bima Sugam) என்ற மின்னணு காப்பீட்டுச் சந்தை தளத்துடன் தங்களது காப்பீட்டு நடைமுறை அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் காப்பீட்டுப் பாலிசிகளை ஒரே மின்னணு தளத்தில் கிடைக்க வழிவகை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் பாலிசிகளை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதற்கும் இது உதவும்.
உரிமையாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
புதிய பாலிசி வாங்கும்போது மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துப் பாதுகாப்பு ஆகியவை கட்டாயமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்ற காப்பீடுகளைத் தேர்வு செய்யும்போது உங்கள் தேவைகளையும் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்வது அவசியம். ஒவ்வொரு பிரிவுக்கான கட்டணத்தையும் தனித்தனியாகச் சரிபார்க்க வேண்டும்.













