- Home
- Auto
- FASTag மட்டும் இருந்தால் போதாது பாஸ்! இனி சுங்கச்சாவடியில் இன்சூரன்ஸும் செக்.. ரூ.10,000 வரை அபராதம்
FASTag மட்டும் இருந்தால் போதாது பாஸ்! இனி சுங்கச்சாவடியில் இன்சூரன்ஸும் செக்.. ரூ.10,000 வரை அபராதம்
இனி சுங்கச்சாவடியை கடந்தாலே வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இருக்கிறதா என்பதை தானியங்கி தொழில்நுட்பம் மூலம் அதிகாரிகள் கண்டறிந்துவிடுவார்கள். காப்பீடு காலாவதியாகியிருந்தால் உடனடியாக SMS வரும் நிலையில், விதிமீறினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்!

சுங்கச்சாவடியில் இனி தப்ப முடியாது!
வாகனங்களுக்கான காப்பீடு காலாவதியான பிறகும், அதைப் புதுப்பிக்காமல் பலர் சாலைகளில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும்போது பாதிக்கப்படுபவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கல்கள் உருவாகின்றன.
இத்தகைய விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுங்கச்சாவடிகளிலேயே வாகனங்களின் காப்பீட்டு நிலையைச் சரிபார்க்கும் சோதனைத் திட்டத்தை NHAI தொடங்கியுள்ளது.
இதன் முதற்கட்ட சோதனை டெல்லியின் Urban Extension Road-II (UER-II) சாலையில் உள்ள முண்ட்கா (Mundka) சுங்கச்சாவடியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த NHAI திட்டமிட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாகனத்தின் காப்பீட்டை எப்படிக் கண்டறிவார்கள்?
இந்தப் புதிய தொழில்நுட்பம் வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு அதன் காப்பீட்டு விவரங்களைச் சரிபார்க்கும்.
இதற்காக மத்திய அரசின் வாகனப் பதிவுத் தரவுகளைக் கொண்ட VAHAN தரவுத்தளம் பயன்படுத்தப்படுகிறது. தேசிய தகவல் மையத்தின் (NIC) பராமரிப்பில் உள்ள இந்தத் தரவுத்தளத்துடன் வாகனத்தின் பதிவு விவரங்கள் ஒப்பிடப்படும்.
அப்போது அந்த வாகனத்திற்கான காப்பீடு நடைமுறையில் உள்ளதா அல்லது காலாவதியாகிவிட்டதா என்பது தானியங்கி முறையில் கண்டறியப்படும்.
காப்பீடு காலாவதியாகியிருப்பது தெரியவந்தால், அந்த வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கு சில நிமிடங்களிலேயே SMS எச்சரிக்கை அனுப்பப்படும்.
SMS-ல் என்னென்ன விவரங்கள் இருக்கும்?
காப்பீடு இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் முக்கியமான விவரங்கள் இடம்பெறும்.
• வாகனத்தின் பதிவு எண்.
• சுங்கச்சாவடியைக் கடந்த தேதி மற்றும் நேரம்.
• வாகனக் காப்பீடு காலாவதியான தேதி.
• காப்பீட்டை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டிய அறிவுறுத்தல்.
இதன் மூலம் காப்பீடு காலாவதியானதை அறியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் உடனடியாகத் தகவல் கிடைக்கும். அதேசமயம், காப்பீடு இல்லாமல் தொடர்ந்து வாகனங்களை இயக்குபவர்களைக் கண்காணிப்பதும் எளிதாகும்.
காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமா?
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, பொதுச் சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் குறைந்தபட்சம் மூன்றாம் நபர் காப்பீடு (Third Party Insurance) கட்டாயமாகும்.
இந்தக் காப்பீடு, வாகனத்தால் மற்றொருவருக்கு விபத்தில் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு தொடர்பான நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
இந்நிலையில், காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம்.
விதிமீறல் - அபராதம்
முதல் முறை அடிப்படை காப்பீட்டுக் கட்டணத்தின் 3 மடங்கு அல்லது ரூ.5,000 (இதில் அதிகமான தொகை)
இரண்டாவது முறை அல்லது அதற்குப் பிறகு அடிப்படை காப்பீட்டுக் கட்டணத்தின் 5 மடங்கு அல்லது ரூ.10,000 (இதில் அதிகமான தொகை)
எனவே, காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்குவது முதல் முறை என்றாலும் அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் அதே தவறைச் செய்தால் அபராதம் ரூ.10,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுமா?
தற்போது டெல்லியில் உள்ள முண்ட்கா சுங்கச்சாவடியில் மட்டுமே இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. சோதனை வெற்றிகரமாக முடிந்து தொழில்நுட்பம் சிறப்பாகச் செயல்படுவது உறுதி செய்யப்பட்டால், நாடு முழுவதும் உள்ள மற்ற சுங்கச்சாவடிகளுக்கும் இந்தக் கண்காணிப்பு முறையை விரிவுபடுத்த NHAI திட்டமிட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவது இன்னும் எளிதாகலாம். எனவே, வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீட்டின் காலாவதி தேதியைச் சரிபார்த்து, உரிய நேரத்தில் புதுப்பித்துக்கொள்வது அவசியம்.











