Wimbledon: 32வது முறையாக க்ராண்ட்ஸ்லாம் ஃபைனலுக்கு முன்னேறி ஜோகோவிச் சாதனை! காயத்தால் ஆடாமலே வெளியேறிய நடால்

First Published Jul 9, 2022, 3:12 PM IST

விம்பிள்டன் அரையிறுதியில் கேமரூன் நாரியை வீழ்த்தி நோவாக் ஜோகோவிச் ஃபைனலுக்கு முன்னேறினார். ஆனால் ரஃபேல் நடால் வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அரையிறுதியில் ஆடாமல் விலகியதால் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
 

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்துவருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரஃபேல் நடால், கேமரூன் நாரி மற்றும் நிக் கிர்ஜியாஸ் ஆகிய நால்வரும் அரையிறுதிக்கு முன்னேறினர்.
 

ஜோகோவிச் மற்றும் கேமரூன் நாரி மோதிய அரையிறுதி போட்டியில், அபாரமாக விளையாடிய ஜோகோவிச் 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நாரியை வீழ்த்தி 8வது முறையாக விம்பிள்டன் ஃபைனலுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் 32வது முறையாக ஜோகோவிச் ஃபைனலுக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
 

ரஃபேல் நடால் காலிறுதி போட்டியில் ஆடும்போதே அவரது வயிற்றுப்பகுதியில் தசை கிழிந்து காயம் ஏற்பட்டது. ஆனால் போராடி அந்த போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய நடால், அந்த காயம் காரணமாக அரையிறுதியில் ஆடவில்லை. அதனால் நிக் கிர்ஜியாஸ் ஃபைனலுக்கு முன்னேறினார்.
 

ரஃபேல் நடால் அரையிறுதியில் ஆடி வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியிருந்தால், ஃபைனலில் சமகாலத்தின் தலைசிறந்த 2 டென்னிஸ் வீரர்களான நடாலும் ஜோகோவிச்சும் மோதுவதை பார்த்திருக்கலாம். வரும் 10ம் தேதி(நாளை) நடக்கும் ஃபைனலில் ஜோகோவிச்சும் நிக்கும் மோதுகின்றனர்.
 

click me!