ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விமானப்படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பயங்கரவாதிகள் 2 பேரின் ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானப்படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் 2 பேரின் ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 4ஆம் தேதி மாலையில், விமானப்படை வீரர்கள் ஜரன்வாலியில் இருந்து விமானப்படை நிலையத்தை நோக்கி, விமானப்படைக்கு சொந்தமான வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பயங்கரவாதிகள் விமானப்படை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சிக்கி விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்திய இந்திய விமானப்படை, பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், விமானப்படை வீரர்கள் துணிச்சலாகப் போராடினர் என்று தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி உள்ளனரா என கண்டறியும் பொருட்டு, ராணுவ வீரர்கள் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் 25 லட்சம் பெண்களை லட்சாதிபதியாக்குவோம்: பிரதமர் மோடி சூளுரை!
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானப்படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் 2 பேரின் ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, தாக்குதல் தொடர்பாக 20க்கும் மேற்பட்டவர்களை பிடித்து ராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்த பயங்கரவாதிகள் ஏகே ரக துப்பாக்கிகள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் மற்றும் எஃகு தோட்டாக்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி பக்கத்து பகுதியில் உள்ள புஃப்லியாஸில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளின் குழு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.