ஒடிசாவில் 25 லட்சம் பெண்களை லட்சாதிபதியாக்குவோம்: பிரதமர் மோடி சூளுரை!
ஒடிசாவில் 25 லட்சம் பெண்களை லட்சாதிபதியாக்க உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி சூளுரைத்தார்
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சில மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு 4,5,6,7ஆவது கட்டம் என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
அதேபோல், மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பிஜு ஜனதாதளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலையொட்டி அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒடிசா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பெஹ்ராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமரின் பேச்சைக் கேட்க ஏராளமானோர் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் பிரதமர் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்காக பந்தல் போடப்பட்டிருந்தது. ஆனால், பந்தலின் உள்ளே கூட்டம் நிரம்பி வழிந்ததால், பந்தலுக்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர். பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் பிரசார திடலுக்கு வந்தபோது, அவரை பந்தலுக்கு வெளியே திரண்டிருந்தவர்கள் உற்சாகமாக கைகளை அசைத்து வரவேற்றனர்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பாஜக அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் உறுதியாக உள்ளது. இங்குள்ள சுயஉதவி குழுக்களை சேர்ந்த 25 லட்சம் பெண்களை லட்சாதிபதிகளாக்க ஒடிசா பாஜக உறுதி பூண்டுள்ளது.” என்றார்.
லக்பதி திதி-க்கள் (லட்சாதிபதி பெண்கள்) திட்டம் என்பது, மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்களின் ஆண்டு வருமானத்தை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. “சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் 2 கோடி பேரை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பதே எனது கணவு.” என பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் தெரிவித்து வருகிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவின் கடலோரப் பொருளாதாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். “நாங்கள் முதல் முறையாக மீன்வளத்துறை அமைச்சகத்தை உருவாக்கினோம், படகுகள் தயாரிக்க மானியம் வழங்கினோம், குறைந்த வட்டியில் கடனுக்காக மீனவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்கினோம். கடற்கரை சுற்றுலாவை விரிவுபடுத்துகிறோம். இந்தியாவின் சுற்றுலா மையமாக கஞ்சம் நதியை உருவாக்க விரும்புகிறோம்.” என்றார்.
சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு ஜாமீன் மறுப்பு!
“ஜகந்நாதரின் புண்ணிய பூமியில் நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரிடமும் ஆசி பெறவே இங்கு வந்துள்ளேன். இன்று அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோவிலில் ராம்லல்லா அமர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு உங்கள் வாக்குகள் தான் காரணம். ஒடிசாவில் இரண்டு யாகங்கள் ஒன்றாக நடக்கின்றன. ஒன்று இந்தியாவில் வலுவான ஆட்சி அமைப்பது மற்றொன்று ஒடிசாவில் பாஜக தலைமையில் வலுவான மாநில ஆட்சி அமைப்பது. ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை எஞ்சின் ஆட்சி அமைக்கப் போகிறது என்பதை உங்கள் உற்சாகம் காட்டுகிறது.” என பிரதமர் மோடி கூறினார்.
ஒடிசாவில் 50 ஆண்டுகளாக காங்கிரஸாகவும், 25 ஆண்டுகளாக பிஜேடியாகவும் இருந்தது. ஆனால் என்ன நடந்தது என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, “ஜூன் 4ஆம் தேதி வாக்கு முடிவுகள் வரும்போது பிஜு ஜனதாதளம் அரசு காலாவதியாகி விடும். அன்று பாஜகவின் புதிய முதல்வர் அறிமுகம் செய்யப்படுவார். ஜூன் 10ஆம் தேதி, புவனேஸ்வரில் பாஜக முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.” என்றார்.