சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு ஜாமீன் மறுப்பு!

By Manikanda Prabu  |  First Published May 6, 2024, 1:31 PM IST

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது


தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா. இவர் தெலங்கானா மேலவை உறுப்பினராக உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ஆம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட கவிதவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் கவிதா அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை திகார் சிறையில் வைத்து சிபிஐயும் கைது செய்தது.

Latest Videos

undefined

நாங்குநேரி: 12ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன்!

தொடர்ந்து, கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதன்படி, கவிதாவின் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், அவரை மே மாதம் 7ஆம் தேதி (நாளை) வரை நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனக்கு ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி காவேரி பவேஜா விசாரித்து வந்த நிலையில், கவிதாவிற்கு ஜாமீன் வழங்க மறுத்து தெரிவித்த நீதிபதி, ஜாமீன் கோருவதற்கான முகாந்திரம் இல்லை என கூறி கவிதாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக, தான் பாஜகவின் கஸ்டடியில் இருப்பதாக கவிதா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!