ஜார்கண்ட் அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரின் வீட்டு பணியாளரிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது
ஜார்க்கண்ட் மாநிலம் ஊரக வளர்ச்சி அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆலம்கிர் ஆலமின். ஜார்க்கண்ட் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் வீரேந்திர ராம் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தபட்ட விசாரணையின் அடிப்படையில், பணமோசடி, சட்டவிரோத பணப்பறிமாற்றம் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஊரக வளர்ச்சி அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சீவ் லால் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சஞ்சீவ் லாலின் வீட்டில் பணிபுரியும் நபர் ஒருவரின் அறையில் இருந்து ரூ.20 கோடி பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சோதனையின் போது கணக்கில் வராத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. சஞ்சீவ் லாலின் உதவியாளர் என்று கூறப்படும் அந்த நபரின் அறையில் கரன்சி நோட்டுகள் பரவியிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் 2024: பீகாரில் பாஜகவின் தூக்கத்தை கெடுக்கும் குஷ்வாஹா சமூகத்தினர்!
முன்னதாக, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் வீரேந்திர ராம் என்பவர் ரூ.100 கோடி சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அம்மாநில அரசின் சில திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள் சிலருடன் அவர் பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படும் பென் டிரைவ் ஒன்றையும் அவரிடம் இருது அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.