மக்களவைத் தேர்தல் 2024: பீகாரில் பாஜகவின் தூக்கத்தை கெடுக்கும் குஷ்வாஹா சமூகத்தினர்!
பீகாரில் தேர்தல் போக்கை குஷ்வாஹா சமூகத்தினர் மாற்றி வருவது பாஜகவினரின் தூக்கத்தை கெடுத்துள்ளது
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். ஆனால், கடைசி நேரத்தில் அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் ஐக்கியமானது. அவரது அடுத்தடுத்த இந்த மாற்றம் ராஷ்ட்ரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமே ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரித்தனர். மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கே ஆதரவு பெருகியிருந்தது.
மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளை பீகார் மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்டங்களில் 9 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கு பீகார் மக்கள் தயாராகி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதம் வரை அதாவது இரண்டு கட்ட வாக்குப்பதிவு வரை பீகார் தேர்தல் களம் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அதன் போக்கு தற்போது மாறி வருகிறது. ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்த அம்மாநிலத்தின் குஷ்வாஹா (கோரி) சமூகத்தினர் காங்கிரஸ்-ஆர்ஜேடி தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மாறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அச்சமூகத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து அவர்களின் போக்கு மாறியுள்ளதாக தெரிகிறது.
குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்த அதிகபட்சமாக 3 பேருக்கு ஐக்கிய ஜனதாதளம் சீட் வழங்கியுள்ளது. பாஜக ஒருவருக்கு கூட வாய்ப்பளிக்கவில்லை. ஆனால், இந்தியா கூட்டணியில் அச்சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆர்.ஜே.டி. 3 பேருக்கும், இடதுசாரிகள் 2 பேருக்கும் காங்கிரஸ் மற்றும் முகேஷ் சாஹ்னியின் கட்சியானது தலா ஒருவருக்கும் வாய்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து அரசியல் ஆய்வாளர் கன்ஹையா பெளரி ஏசியாநெட் செய்தியிடம் கூறுகையில், “பீகாரீல் தேசிய ஜனநாயகக் கூட்டணி - இந்தியா கூட்டணிக்கு இடையே போட்டி அல்ல; தேஜஸ்வி - மோடி ஆகிய இருவருக்குத்தான் போட்டி. பாஜக, ஐக்கிய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் குஷ்வாஹ சமூகத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும், அக்கட்சியை சேர்ந்தவர்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர். அவர்களை மாநிலத் தலைவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.” என்றார்.
பீகாரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநில மக்கள்தொகையில் குஷ்வாஹா சமூகத்தினர் 4.5 சதவீதம் உள்ளனர். அச்சமூகத்தினர் பாரம்பரியமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே ஆதரவளித்து வருகின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது எப்படி மாறியது என்ற கேள்விக்கு பதிலளித்த கன்ஹையா பெளரி, சீட் விநியோகத்திற்கு பிறகு கோரி மற்றும் மல்லா சமூகங்கள் ஆர்ஜேடி பக்கம் தங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொண்டனர் என்கிறார். பீகாரில் மல்லா சமூகத்தின் மக்கள் தொகை 2.6 சதவீதமாகும்.
இடஒதுக்கீடு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற உள்ளூர் பிரச்னைகள் இந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், மாநிலத்தில் 14.5 சதவீதமாக இருக்கும் யாதவர்களின் வாக்குகள் கிட்டத்தட்ட அப்படியே உள்ளன. அவை ஆர்ஜேடிக்கு செல்லும் வாக்குகள். மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 17 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இதனுடன், கோரி மற்றும் மல்லா சமூகங்களின் வாக்குகளையும் சேர்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட இந்தியா கூட்டணிக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும் கன்ஹையா பெளரி சுட்டிக்காட்டுகிறார்.
பீகாரில் இது ஒரு சுவாரஸ்யமான தேர்தல் என்றும், என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் பாட்னாவில் உள்ள யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் ரவி உபாத்யாய் கூறுகிறார். மூன்று கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னரே தெளிவான படம் தெரியவரும் எனவும் அவர் கூறுகிறார். நவாடா மற்றும் பூர்ணியா போன்ற இடங்களில் யாதவர்கள் ஆர்ஜேடிக்கான ஆதரவில் இருந்து விலகி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“அரசுப் பணி, விலைவாசி உயர்வு, விவசாயம், சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற பிரச்னைகள்தான் மக்கள் எழுப்பும் முக்கிய விஷயங்கள். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மக்கள் தங்கள் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். இது பீகாரில் ஒரு புதிய மாற்றம்.” என பீகார் அரசியலை உற்று நோக்கும் ராஜீவ் ரஞ்சன் கூறியுள்ளார். தேஜஸ்வி ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு அரசு வேலை வழங்குவார் என்று மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் நம்புகிறார்கள். இது ஆளுங்கட்சிக்கு 2024 மக்களவைத் தேர்தலை சவாலாக மாற்றியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.