நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்! சிம்லா முத்துச்சோழனுக்கு பதில் ஜான்சி ராணி போட்டி ஏன்? பரபரப்பு தகவல்!

First Published Mar 24, 2024, 8:00 AM IST

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் சிம்லா முத்து சோழன் நெல்லை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு ஜான்சி ராணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கான பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது. 

shimla muthuchozhan

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 33 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அண்மையில்  திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் 2வது மருமகள் சிம்லா முத்துச்சோழன் அக்கட்சியில்  இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

Nellai AIADMK candidate

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கட்சியின் இணைந்த 15 நாட்களில் சிம்லா முத்துச்சோழன் நெல்லை வேட்பளராக அறிவிக்கப்பட்டது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆர்.கே.நகர். தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு அதிமுக சீட் கொடுப்பதா? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் சென்னையில் பிறந்து வளர்ந்த சிம்லா முத்துச்சோழனுக்கு ஏன் இந்த வாய்ப்பை கட்சி வழங்கியது என்ற கேள்வியும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. 

Nellai AIADMK candidate Changed

இந்நிலையில் தான் சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திசையன்விளை பேரூராட்சி மன்ற தலைவரும் அதிமுக செயற்குழு உறுப்பினருமான ஜான்சிராணி நெல்லை வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Jhansi Rani

யார் இந்த ஜான்சி ராணி

அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி (42) திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மன்னராஜா கோயில் தெருவை சேர்ந்தவர். பி.ஏ.பட்டதாரி. இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர். 2005-ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் பணியாற்றி வருகிறார். 2006 முதல் 2016 வரை திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலராகவும், 2012 முதல் 2017 வரை திசையன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் இருந்துள்ளார். 2012 முதல் திசையன்விளை நகர மகளிரணி செயலாளராகவும், 2021 முதல் திருநெல்வேலி மாவட்ட மகளிரணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 2022 முதல் திசையன்விளை பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். 

click me!